வவுனியாவில் சீமெந்துக்கு தட்டுப்பாடு : விநியோகத்தர்கள் அதிக விலைக்கு தர முயல்வதாக குற்றச்சாட்டு!!

1391

சீமெந்து..

வவுனியாவில் சீமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு கட்டுமாணப் பணிகளும் பாதிப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் பரவலாக கட்டடநிர்மாணப் பொருள் விற்பனை நிலையங்களில் சீமெந்துக்கு தட்டுபாடு நிலவி வருகின்றது.

அபிவிருத்திட்டங்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமாணங்களில் ஈடுபட்டுள்ளோர் சீமெந்தினை தேடி பல்வேறு வர்த்தக நிலையங்களுக்கும் அலைந்து வருகின்றனர்.

இது தொடர்பில் சீமெந்து விற்பனையாளர்களிடம் கேட்ட போது, தாம் 1005 ரூபாய்க்கு சீமெந்தினை விற்பனை செய்து வந்தோம். தற்போது அந்த விலைக்கு விற்பனை செய்யக் கூடிய வகையில் சீமெந்து வழங்கப்படவில்லை.

தற்போது சீமெந்து விநியோகிக்கும் சிலரிடம் சீமெந்தினைப் பெற்றால் 1200- 1250 ரூபாய் வரையிலேயே எம்மால் விற்பனை செய்ய முடியும்.

அவ்வாறு விற்பனை செய்தால் அதிக விலைக்கு விற்பதாக பாவனையாளர் அதிகார சபையினர் நடவடிக்கை எடுப்பார்கள். அதனால் நாம் கூடிய விலைக்கு வரும் சீமெந்தினை கொள்வனவு செய்யவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சீமெந்துக்கு தட்டுபாடு நிலவுவதால் விடுமுறைக் காலத்தில் கூட பல்வேறு அபிவிருத்தி சார் மற்றும் சொந்த கட்டுமாண நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையில் அரச நிர்வாகத்தினரும், ஒப்பந்தக்காரரும், பொது மக்களும் அவதிப்படுவதை அவதானிக்க முடிகிறது.