வவுனியாவில் இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அருணோதயம் நகரம் பயனாளிகளிடம் கையளிப்பு!!

1492

அருணோதயம் நகரம்..

இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வவுனியா, அருணோதயம் நகரம் குடியிருப்பு தினத்தை முன்னிட்டு பயனாளிகளிடம் இன்று (04.10) கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷவின் தொலைநோக்கு கொண்ட வழிகாட்டலின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆசிர்வாதத்துடன் இலங்கை – இந்திய நட்புறவை மேலோங்கச் செய்யும் வகையில்,

இந்தியா நிதியுதவி வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வவுனியா மாவட்டத்தின் வெண்கல செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மெனிக்பாம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் அடங்கிய ‘அருணோதயம்’ நகரானது உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தான், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா,

வவுனியா வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர், அரச அதிகாரிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் குறித்த வீட்டுத்திட்டமானது உத்தியோகப்பூர்வமாக பயனாளிகளுக்கு கையளித்து வைக்கப்பட்டது.