முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனத்தையும், சம்பளத்தையும் பெற குறித்த விடயத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டும்!!

892


வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனத்தையும், நிரந்தர சம்பளத்தையும் பெற குறித்த விடயத்தை அரசியல் ரீதியாக அமைச்சரவையுடன் அணுக வேண்டும் என ஊடகவியலாளர் கி.வசந்தரூபன் தெரிவித்துள்ளார்.



நாட்டின் கோவிட் தாக்கமும் பொருளாதார நிலையும் தொடர்பில் இலத்திரனியல் செயலி மூலம் இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின் போது ‘முன்பள்ளி ஆசிரியர்கள் வேதனங்கள் இல்லாது நிரந்தர நியமனம் அற்ற நிலையில் உள்ளனர்.



வன்னியைப் பொறுத்தவரை அரசாங்க கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 2500 ரூபாய் தருவதாக கூறியிருந்தார்கள். அது கூட எல்லோருக்கும் கிடைக்கவில்லை. 30 – 35 வருடமாக முன்பள்ளி ஆசிரியர்களாக பணியாறிறியவர்கள் இருக்கிறார்கள். கோவிட்டால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.



இவர்களுக்கான நிரந்தர சம்பளம் தொடர்பாக என்ன செய்ய முடியும் என முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பான விடயத்தில் வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் முன்பள்ளி ஆசிரியர்களில் பலர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிரந்தரமாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களாக உள்வாங்கப்பட்டு சம்பளக் கொடுப்பனவுகள் நடைபெறுகின்றன.

வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தக் கொடுப்பனவு கிடைக்கவில்லை.


இவர்களில் பலர் தனியார் முன்பள்ளிகளின் கீழ் பணியாற்றுகிறார்கள். ஆகவே இவ்வாறானவர்களுக்கான அரசாங்க கொடுப்பனவு அதாவது சம்பளங்கள் கிடைக்கவில்லை. மாகாணத்தால் உதவித் தொகை ஒன்று மட்டுமே வழங்கப்படுகின்றது.

இதனை அரசியல் ரீதியாக அணுக வேண்டும். அமைச்சரவை அனுமதியோடு தான் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் அல்லது அவர்களை அரச சேவையில் உள்வாங்குதல் தொடர்பில் முடிவு எட்டப்பட முடியும்.

அதன் ஊடாக தான் மாதாந்தம் நிரந்த வருமானத்தை கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் பெறுவது போன்று பெற முடியும். அவ்வாறு இல்லையெனில் தாங்கள் செயற்படும் முன்பள்ளி நிறுவனத்தின் கீழ் தான் இதனைக் கேட்க முடியும்.

நிரந்தர அரச சேவைக்குளம் உள்ளீர்க்கப்படாவிட்டால் உதவிகளையே செய்ய முடியும். ஆகவே நிரந்த நியமனத்தைப் பெற்று நிரந்தர சம்பளத்தைப் பெற யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அரசியல் ரீதியாக இதணை அணுக ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்தார்.