வவுனியாவில் வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதாரப் பிரிவினர் சோதனை : 6 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

1837


சுகாதாரப் பிரிவினர் சோதனை..



வவுனியாவில் வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்ததுடன், 6 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.



வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்களும், பொலிசாரும் அங்கு சமூக இடைவெளி, சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என சோதனை செய்ததுடன்,




சுகாதார நடைமுறைகள் மற்றும் இருக்கைகள் தொடர்பில் வங்கி உத்தியோகத்தர்களுக்கு சுகாதாரப் பிரிவினாரால் அறிவுறுத்தல்களும் இதன்போது வழங்கப்பட்டது.


தொடர்ந்து பசார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி என்பவற்றில் அமைந்துள்ள நகைக் கடைகள், உணவகங்கள், புடவைக் கடவைகள், பன்சிக் கடைகள், பலசரக்கு கடைகள், வெற்றிலை விற்பனை நிலையங்கள், பேக்கரி, நகை அடைவு பிடிக்கும் கடைகள்,

தோல் உற்பத்திப் பொருள் விற்பனையகங்கள் என்பன சுகாதாரப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டதுடன், சமூக இடைவெளி பேணாமை மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை சீராக பின்பற்றாமை தொடர்பில் பல வர்த்தக நிலையங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.


மேலும், முகக்கவசம் அணியாது நகை வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர், பலசரக்கு பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர், தோல் உற்பத்தி பொருள் விற்பனை செய்த ஒருவர் என ஐந்து பேருக்கும்,

உணவகத்தில் மக்களை இருக்கைகளில் அமர்த்தி உணவு விற்பனையில் ஈடுபட்ட வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் என 6 பேருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்ததுடன், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.