வவுனியா நகர பள்ளிவாசல் மறு அறிவித்தல் வரை சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டது!!

1385


நகர பள்ளிவாசல்..



வவுனியா நகர பள்ளிவாசல் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக சுகாதாரப் பிரிவினரால் இன்று (09.10) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.



வவுனியா நகர பள்ளி வாசலில் வெள்ளிக் கிழமை தொழுகைக்காக பலர் ஒன்று கூடியுள்ளதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று (08.10) சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.




இதன்போது பள்ளிவாசலில் ஒன்றுகூடியிருந்தவர்களின் விபரங்கள் பெறப்பட்டு, அவர்கள் எச்சரிக்கையின் பின் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதுடன்,


பள்ளிவாசல்களின் வாயில்கள் மூடப்பட்டதுடன், பள்ளி நிர்வாகத்தினருக்கும் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக சுகாதார விதிமுறை மீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.


இதன் தொடர்ச்சியாக இன்று (09.10) குறித்த பள்ளிவாசலுக்கு சென்ற சுகாதாரப் பிரிவினரால் ‘வெள்ளிக்கிழமை மக்கள் நடமாட்டம் பள்ளிவாசல் எல்லைக்குள் கூடுதலாக காணப்பட்டமையால்,

கோவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக மறு அறிவித்தல் வரை இப் பள்ளிவாசல் மூடப்படுகிறது’ எனத் தெரிவித்து பிரதான வாயிலில் பதாதை ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தினத்தில் ஒன்று கூடியவர்களுக்கு பிசீஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.