பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் தீயில் கருகிய ஐவரின் உடல் அடக்கம்!!

1961

நுவரெலியா..

நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் இறுதி கிரியைகள் இன்றிரவு இடம்பெற்றுள்ளன.

தோட்ட மைதானத்தில் சடலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,தோட்ட மக்கள் அணிதிரண்டு கண்ணீர் மழ்க இறுதி கிரியைகளில் பங்கேற்று சடலங்களை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்துள்ளனர்.

தோட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதுடன்,தோட்ட மக்கள் தமது தொழில் நடவடிக்கைகளையும் கைவிட்டிருந்தனர்.

இராகலையில் ஏற்பட்ட தீவிபத்துச் சம்பவத்தில் உடல் கருகிப் பலியோனோரின் சடலங்கள் தொடர்பில் நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் திறந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன்,

உடற் கூற்று மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட வேண்டும் என இன்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் போது, உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட முடியாததால் இந்த திறந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெற்றன. இதன்போதே, நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடொன்று (07) இரவு பத்து மணியளவில் தீப்பிடித்துள்ளது. இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில்,

வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.