வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!!

447


ஆர்ப்பாட்டம்..


1700 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட கொட்டகை முன்பாக இன்று (13.10) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.


போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்களையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார், 1700 ஆவது நாளாக நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். எங்களது பிள்ளைகளுக்கு எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. ஜனாதிபதி மரணச் சான்றிதழ் வழங்குவதாக கூறியுள்ளார்.

எந்தவொரு தாயும் மரணச் சான்றிதழ் வாங்குவதற்கு தயாராக இல்லை. அதை ஜனாதிபதி சொன்ன நாளில் இருந்து தாய்மார் தேம்பி தேம்பி அழுகிறார்கள். ஜனாதிபதி அமெரிக்கா சென்று தனது பேரப்பிள்ளையை தூக்கி மகிழ்கின்றார்.

நாங்கள் அம்மா அம்மா என கதறும் போது எமது பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு போராடிக் கொண்டிருக்கின்றோம். அவருக்கு இருக்கிற பாசம் தானே எங்களுக்கும் எங்கள் பிள்ளைகள் மேல் இருக்கும்.

அம்மா என்று சத்தம் கேட்கும் போது எமது வயிறு கொதிக்கிறது. கண்கண்ட சாட்சியங்கள் இருக்கிறது. கோட்டபாய துரோகி. எவ்வாறு நாம் ஒப்படைத்த பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.