
ஐ.சி.சி.யின் 5வது T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குள் முதலாவதாக நுழைவது யார் என்பதை தீர்மானிக்கும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஐ.சி.சி.யின் 5வது T20 உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது. 16 அணிகள் களமிங்கிய இத் தொடரின் இறுதியில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்திய பிரதான சுற்று இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளது.
சுப்பர் 10 சுற்றில் 10 அணிகள் விளையாடின. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டு இருந்தது. பிரிவு 1 இல் இருந்து இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளும், பிரிவு 2 இல் இருந்து இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
போட்டித் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டம் நேற்று மிர்பூரில் இடம்பெற்றது. இதில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுதின.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் மழையின் குறுக்கீடால் போட்டி பாதியில் இடைநிறுத்தப்பட்டது.
இப்போட்டியில் தினேஷ் சந்திமால் தானாக விலகி கொண்டதையடுத்து அணிக்கு தலைமை தாங்கிய லசித்த மலிங்க நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா (26), டில்ஷான் (39) ஓரளவு கைகொடுத்தனர். மஹேல ஜயவர்தன (0), சங்ககரா (1) அதிர்ச்சியளித்தனர். திரிமனே (44) அரை சத வாய்ப்பை இழந்தார். ஏஞ்சலோ மத்தியூஸ் 40 ஓட்டங்களுடனும் சீக்குகே பிரசன்ன 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து இலங்கை அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 160 ஓட்டங்களை எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் சன்டோக்கி 2 விக்கெட்டுகளையும், ரசல் மற்றும் பத்ரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் இலங்கை டக்வொர்த் லூவிஸ் முறையில் வெற்றி பெற்றுள்ளது.
தொடர்ந்து மழைபெய்தால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறையில் இலங்கைக்கு வெற்றிக்கு வழங்கப்பட்டது.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மலிங்க இரு விக்கெட்டுகளையும் குலசேகர மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஏஞ்சலோ மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியில் மூலம் இலங்கை அணி T20 தரவரிசையில் இந்திய அணியை பின்தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
இலங்கை அணி 4வது முறை தொடர்ச்சியாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டு சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இறுதிப் போட்டியில், இன்று நடைபெறும் இந்திய-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் விளயாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





