வவுனியாவில் யுத்தத்தால் பாதிப்படைந்த 80 குடும்பங்களுக்கு இழப்பீடுகளும் 20 ஆலயங்களின் புனரமைப்புக்கான நிதியும்!!

1431

இழப்பீடு..

வவுனியாவில் யுத்தத்தால் பாதிப்படைந்த 80 குடும்பங்களுக்கு இழப்பீடுகளும், 20 ஆலயங்களை புனரமைப்பதற்கான நிதியும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனால் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலகத்தில் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (19.10) குறித்த நிகழ்வு இடம்பெற்றது. யுத்தம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு, அங்கவீனமுற்றமை மற்றும் சொத்தழிவு என்பவற்றுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இழப்பீட்டுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் வவுனியா பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட 80 குடும்பங்களுக்கு அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாக பிரதமரின் நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட 20 ஆலயங்களின் புனரமைப்புக்கான நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளர் டினேஸ், பிரதேச கலாசார உத்தியோகத்தர் குகனேஸ்வர சர்மா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.