வவுனியாவில் பல பாடசாலைகளுக்கு பூட்டு : திரும்பிச் சென்ற மாணவர்கள்!!

2349

பாடசாலை..

வவுனியாவில் பாடசாலைகள் பல பூட்டப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் பாடசாலைகளுக்கு பெரியளவில் சமூகமளிக்கவில்லை. அத்துடன் அதிபர் , ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பும் தொடர்கின்றது.

இன்று முதல் 200 மாணவர்களுக்கு குறைவான ஆரம்ப பாடசாலைகளை நாடு முழுவதும் மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் 85 பாடசாலைகள் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அதிபர் , ஆசிரியர்கள் தொழிற்சங்கம் சம்பள முரண்பாடு காரணமாக இன்றும் தொடர்ந்தும போராட்டத்தில் ஈடுபட்டு வருவதானால் பெரும்பாலான பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமூகமளிக்கவில்லை.

இதனால் சில பாடசாலைகளின் பிரதான வாயில்கள் மூடப்பட்டு காணப்பட்டன. மாணவர்கள் பாடசாலைகளுக்கு பெரியளவில் சமூகமளிக்கவில்லை.

சில பாடசாலைகளில் ஒரு சில மாணவர்கள் வருகை தந்த போதும் பாடசாலைகள் மூடப்பட்டு இருந்தமையாலும் அதிபர்- ஆசிரியர்கள் வராமையினாலும் சில மாணவர்கள் திரும்பிச் சென்றிருந்தனர். பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மூன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த வித்தியாலயத்தின் பிரதான வாயில் பூட்டு பெற்றோரால் உடைக்கப்பட்டு வருகைதந்த மாணவர்கள் உட் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோர்கள் அதிபர் , ஆசிரியர்கள் வராமை தொடர்பில் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

வெளிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயம் திறக்கப்பட்டுள்ள போதும் அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை. தெற்கிலுப்பைகுளம் பராசக்தி வித்தியாலயம் பூட்டப்பட்டுள்ளதுடன் மூன்று மாணவர்கள் வருகை தந்து திரும்பிச் சென்றாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய பல பாடசாலைகளிலும் பெரியளவில் அதிபர்- ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவில்லை.