ரோஜாவின் வெற்றிக்காக களமிறங்கிய கணவர்!!

760

Roja

ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிடுகிறார். வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கிய போதே நகரி தொகுதி வேட்பாளராக நடிகை ரோஜா அறிவிக்கப்பட்டார்.

முதல் வேட்பாளர் என்ற பெருமையுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடிகை ரோஜா தொகுதியில் முகாமிட்டு பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

படிக்க வசதியில்லாத ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு தனது சொந்த செலவில் மாதம் 300 ரூபாய் கல்வி உதவியாக வழங்கி வருகிறார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார்.

நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் சார்பில் முன்னாள் அமைச்சர் முத்து கிருஷ்ணநாயுடு போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றவர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்.

காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செங்காரெட்டியின் மகளும், மாநில மகளிர் அணி செயலாளருமான சத்திய சொரூப இந்திரா போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் தொகுதியில் ரோஜாவுக்கும், முத்து கிருஷ்ணநாயுடுவுக்கும் இடையேதான் போட்டி உள்ளது.

நடிகை என்பதால் ரோஜாவுக்கு தொகுதி மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவர் எந்தவித பந்தா இல்லாமல் ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுகிறார். குடிசை வீட்டில் சென்று அவர்கள் சாப்பிடும் உணவை கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்.

இந்த தொகுதியில் தமிழர்கள் அதிகம் பேர் உள்ளனர். ரோஜாவின் கணவர் இயக்குனர் செல்வமணி தமிழர் மட்டுமல்லாமல் செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

நகரி தொகுதியில் 60 சதவீதம் மக்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள். எனவே செல்வமணி, மனைவி ரோஜா வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் குதித்து உள்ளார். தமிழர்கள், நெசவாளர்கள் வீடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சிதான் வரப்போகிறது. ரோஜாவை வெற்றி பெறச் செய்தால் உங்களுக்கு பல நன்மைகள் பெற்று தருவார் என்று பிரசாரம் செய்து வருகிறார். நகரியில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். எனவே அவர்கள் ஆதரவு ரோஜாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.