
20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர்–10 சுற்றுடன் வெளியேற்றப்பட்டது. அதிலும் கடைசி லீக்கில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வெறும் 82 ஓட்டங்களிலேயே சுருண்டு மோசமாக தோற்றது.
20 ஓவர் உலக கிண்ண வரலாற்றில் பாகிஸ்தான் அணி அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் தலைவரான முகமது ஹபீஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகிகளை நேற்று சந்தித்து பேசிய அவர் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கான தலைவர் மற்றும் ஒரு நாள் போட்டி துணை தலைவர் பதவி ஆகியவற்றில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
எந்த தலைவரின் கீழும் தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் அணிக்கு, அடுத்த 20 ஓவர் போட்டி 6 மாதங்கள் கழித்து வருவதால் 20 ஓவர் அணியின் புதிய தலைவரை நியமிப்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவசரம் காட்டாது என்று தெரிகிறது.
இதற்கிடையே ஆசிய கிண்ணம் மற்றும் 20 ஓவர் உலகக் கிண்ணம் ஆகிய போட்டிக்கு மட்டும் பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மொயின் கான் அந்த பொறுப்பில் தொடருவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.





