இலங்கையில் விரைவில் மற்றொரு கொரோனா அலை : ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை கடிதம்!!

1067


கொரோனா அலை..



கோவிட் தொற்றின் மற்றொரு அலையை தடுக்கும் முயற்சியில் தற்போதைய சுகாதார விதிமுறைகளின் பின்னணியில் துல்லியமான நடவடிக்கைகளை எடுப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.



அந்த சங்கத்தின் Intercollegiate Committee தலைவர்களான வைத்தியர் பத்மா குணரத்ன (Dr. Padma Gunaratne) மற்றும் தாமசி மகுலொலுவ ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளனர்.




நேற்றைய தினம் குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடித்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


கோவிட் வைரஸ் தொற்றுக்கான மற்றொரு அலை நாட்டின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“கோவிட் தொற்றின் கடைசி அலையைத் தணிக்க அரசாங்கம் எடுத்த முடிவுகளைப் பாராட்டும் அதேவேளையில், பிரித்தானியா, சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் சமீபத்திய கோவிட் பரவலிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றொரு அலை உடனடி என்று நம்பத் தூண்டுகிறது,” என்று அவர்கள் கூறியுள்ளனர்.


பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த நியாயமான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தாலும், அந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் மந்தமானதாக இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டனர்.

பலர் முகக்கவசம் அணிவதைக் கடைப்பிடிப்பதில்லை, கடைகள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற பொது இடங்களில் சமூக இடைவெளி பராமரிக்கப்படவில்லை.

“இந்த விதிமுறைகளை தீவிரமாக கண்காணிப்பு அமைப்பு மூலம் அமுல்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறும், சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (DGHS) வழங்கிய சுகாதார விதிமுறைகள் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

ஃபைசர் தடுப்பூசியின் மூன்றாவது அளவு அல்லது பூஸ்டர் தடுப்பூசியினை முன்னுரிமை குழுக்களுக்கு வழங்க வேண்டும். இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்ற முதியவர்களில் ஏழு சதவீதத்தினருக்கு கோவிட் தொற்று எதிராக போதுமான அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை என்பது நிறுவப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மீளத் திறப்பதும் கட்டுப்பாடுகளை நீக்குவதும் முதியோர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள 60 வயதுக்கு குறைவான நோயாளிகள் மற்றும் அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் தாமதமின்றி மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசியை வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தமிழ்வின்-