14 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள அவலம் : மூன்று சந்தேகநபர்கள் கைது!!

1006

14 வயது சிறுமிக்கு..

மூன்று வருடங்களுக்கு முன்னர் இருந்து 14 வயது சிறுமியைக் கடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்துள்ளதாகக் கொழும்பு வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்த நபர், சிறுமியின் சகோதரியின் காதலன் ஆகியோர் இந்த மூன்று பேரில் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர். சகோதரியின் காதலன் இராணுவத்தில் பணிபுரியும் நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடவலவ, ராஜகிரிய மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 64, 59 மற்றும் 36 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாய் மற்றும் சில சகோதர சகோதரிகளுடன் ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை மரணமடைந்துள்ளார்.

இதன் பின்னர் தாயின் மறைமுக தொடர்பாளர் வீட்டில் வந்த தங்க ஆரம்பித்துள்ளார். 64 வயதான இந்த நபர், சிறுமியைத் தந்திரமாக ஏமாற்றி தகாத உறவுக்கு தூண்டியுள்ளதுடன், சிறுமிக்குக் கையடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கிக்கொடுத்துள்ளார்.


ஆரம்ப விசாரணைகளுக்கு அமைய 2018 ஆம் ஆண்டு சிறுமி கடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள 64 வயதான நபர், ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த தனது நண்பரும் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த இடமளித்துள்ளார்.

இதன் பின்னரே சிறுமியின் மூத்த சகோதரியின் காதலனான இராணுவ வீரர், சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க ஆரம்பித்துள்ளார். இந்த சந்தேக நபர் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்துச் சென்றுள்ளார்.

தனக்கு நேர்ந்த இந்த சம்பவங்கள் குறித்து சிறுமி சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிறுமியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளில் கிடைத்த தகவலுக்கு அமையச் சிறுமியை முதலில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் உடவலவ பிரதேசத்தில் வீடொன்றில் தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் கிடைத்த தகவலின் பின்னர் ஏனைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணைகளில், சிறுமியை மேலும் சிலர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. அந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.