கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மக்கள் வங்கி : சீன தூதரகம் அதிரடி : மக்கள் வங்கி பதிலடி : நடந்தது என்ன?

1359

இலங்கையின் மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும்,

ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையை அடுத்தே இந்த நடவடிக்கையை, சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் எடுத்துள்ளது.

சீன தூதரகம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த தீர்மானத்தை சீன தூதரகம், சீனாவின் வர்த்தக அமைச்சுக்கும் சமா்ப்பித்துள்ளது.

இந்த நிலையில் ஒப்பந்தக் கடமை, வணிக விதிகள் மற்றும் சர்வதேச வர்த்தக வழக்கங்களை மீறி, இலங்கை மக்கள் வங்கி எல்/சி செலுத்தத் தவறிதன் மூலம், சீன நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை மக்கள் வங்கியால் வழங்கப்பட்ட (கடன் கடிதம்) எல்/சியை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து சீன நிறுவனங்களும் சீனத் தூதரகம் அறிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீன தூதரகத்தின் அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் வங்கி பதிலடி!!

நீதிமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் சீன நிறுவனத்தின் கொடுப்பனவுகள் தொடர்பில் உாிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவின் சேதனப்பசளைகள் நிறுவனத்தின் கடன் கடிதக் கொடுப்பனவுகள் மற்றும் ஒப்பந்தங்களை உாிய முறையில் செயற்படுத்தாமை காரணமாக இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக முன்னதாக சீன தூதரகம் அறிவித்திருந்தது.

இதனையடுத்தே மக்கள் வங்கியின் இந்த பதில் வெளியாகியுள்ளது.
கொடுப்பனவுகளை இடைநிறுத்துவது தொடர்பில் நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தமை காரணமாகவே தாம் அதனை நிறுத்தியதாக மக்கள் வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மக்கள் வங்கியின் இந்த செயற்பாடு காரணமாக சீனாவின் சேதனப் பசளை நிறுவனத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியிருந்தது.

அத்துடன் இலங்கையுடன் சர்வதேச வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்கள், இலங்கை மக்கள் வங்கியால் வழங்கப்படும் கடன் கடிதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.