வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் அவசரமாக கூடி ஆராய்வு!!

954

தமிழ்க் கட்சிகள்..

வவுனியாவில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ் கட்சிகள் வவுனியாவில் அவசரமாக கூடி ஆராய்ந்திருந்தனர். தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இன்று (29.10) மாலை இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் திட்டமிட்ட ரீதியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. மகாவலி திட்டத்தின் ஊடாகவும் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இன விகிதாசாரம் மாற்றமடைந்து வவுனியா வடக்கு பிரதேச சபை பறிபோகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதுடன், சிங்கள பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்ப்பை வெளியிட வேண்டும் என இக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து வரும் வாரம் வவுனியா வடக்கில் குறித்த குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ் கட்சிகள், பொது மக்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவது எனவும் இதில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தணிகாசலம், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி, சிவசோதி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் நகரசபை உறுப்பினர்களான எஸ்.சந்திரகுலசிங்கம், சு. காண்டீபன்,

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை தலைவர் இ.கௌதமன், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களான கே.அருந்தவராசா, றேகன்,

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சந்திரபத்மன், மாக்ஸிஸ லெனினிச கட்சி சார்பில் நி.பிரதீபன், ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் அக்கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.