வவுனியா உட்பட நாடு முழுவதும்கலைஞர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்புறுதித்திட்டம்!!

1035

இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் பொருளாதார ரீதியான நன்மைகளை உள்ளடக்கவுள்ளதுடன்,

கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்புறுதித்திட்டம் என்பவற்றையும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி நிசாந்தி ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சின் செயற்பாடுகள் குறித்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அமைச்சானது புதிதாக விடயப் பரப்புக்களை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அமைச்சு. அதனால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது. அதனால் உள்ள நிதியைக் கொண்டு இயலுமான வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கலைஞர்களுக்கான அடையாள அட்டை தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போதும் கூட பல பிரதேச செயலங்கள் ஊடாக கலைஞர்களுக்கான அடையாள அட்டைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அடையாள அட்டைகளை பயனற்ற அட்டைகளாக நாங்கள் கருதுகின்றோம். கலைஞர்களுக்கான அடையாள அட்டையைப் பெறும் போது அதில் ஒரு பிரயோசனம் இருக்க வேண்டும். மதிப்பும், மகிமையும் இருக்க வேண்டும்.

அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற அடையாள அட்டை பயனுள்ளதாக, புகழ் மிக்கதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதனை செப்பனிட்டு வருகின்றோம்.

குறித்த அடையாள அட்டையானது கலைஞர்களுக்கு புகழ் தரும் அதேவேளை, பொருளாதார ரீதியாகவும் நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

காகில்ஸ் அல்லது பல்பொருள் அங்காடி, வைத்தியசாலை என்பவற்றுக்கு செல்லும் போது அந்த அடையாள அட்டையை காட்டினால் அதற்கு அவர்கள் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் ஒரு கழிவு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு பெறுமானம் நிறைந்த அடையாள அட்டையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டையினை வழங்குவதற்கான தரவுகளை சேகரித்து வருகின்றோம். இலங்கையில் இருக்கின்ற அனைத்து கலைஞர்களின் விபரங்களும் தற்போது இல்லை.

கலைஞர்களின் தகவல்களைப் பெறுவதற்காக பிரதேச செயலங்கள் ஊடாக படிவம் ஒன்றை வழங்கியுள்ளோம். இரண்டு வாரங்களின் பின் தரவுத் தளத்தில் பிரவேசித்து பார்வையிட முடியும் என்பதுடன், பதிவு செய்வதற்கும் முடியும்.

தரவுத் தளத்தில் பதிவதன் மூலம் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் கலைஞர்களுக்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம்.

கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்புறுதி திட்டங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் பேசப்பட்டாலும் கூட அதனை நடைமுறைப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எங்களுக்கு கிடைத்த ஓதுக்கீடுகளுக்கு ஏற்ப அரசாங்க அதிபர்களிடம் காப்புறுதி திட்டம் வழங்கக் கூடிய கலைஞர்களை தெரிவு செய்து தருமாறு கேட்டுள்ளோம். அடுந்த நிதி ஆண்டில் இன்னும் பல வேலைத்திட்டங்களை செய்வதற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார் எனத் தெரிவித்தார்.