கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் கொலை : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

1438

கொழும்பில்..

சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி – சமித்புர பகுதியை சேர்ந்த கணவன், மனைவி இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்டத்திற்கு அடிமையான பெண்ணிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் இருந்து மொஹமட் சஷி பாத்திமா மும்தாஸ் என்ற 42 வயதுடைய பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண், கொழும்பு மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் என, குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாத்திமா கடந்த 28ம் திகதி மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த தோழி ஒருவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார். இந்நிலையில், பாத்திமா முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி மோதர பகுதியில் சென்றதாக பாத்திமாவின் தோழி சித்தி ரோஷனா (36) பொலிஸாரிடம் தெரிவித்தார்.

எனினும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​பாத்திமாவின் தோழி கூறியது முரண்பாடாக இருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். முரண்பட்ட வாக்குமூலங்களை வழங்கியதற்காக ரோஷனா மற்றும் அவரது கணவர் ஆனந்த பாபு ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியரிடம் நடத்திய விசாரணையில், பாத்துமாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த தம்பதியினர் சடலத்தை சூட்கேஸில் அடைத்து கடந்த 29ம் திகதி லொறி ஒன்றில் எடுத்துச் சென்று சப்புகஸ்கந்த – மாபிம வீதியிலுள்ள குப்பை மேட்டில் வீசிச் சென்றுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய மற்றைய நபர் பாத்திமாவின் தங்க நகைகள் மற்றும் பணத்துடன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சடலத்தை ஏற்றிச் சென்ற லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டியைக் கண்டுபிடிக்கும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.