உயிருக்கு போராடிய 5 பேர் : வேடிக்கை பார்த்த மக்கள் : ஹீரோவாக மாறிய இளைஞன்!!

1429


தமிழகத்தில்..



தமிழகத்தில், கார் ஒன்று கால்வாய்க்குள் விழுந்து ஐந்து பேர் உயிருக்கு போராடிய நிலையில், அவர்கள் 5 பேரின் உயிரையும் இளைஞன் ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரையில் உள்ள வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஆற்றிலிருந்து, மாரநாடு கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.




இதன் காரணமாக மதுரை, ராமேஸ்வரம் இடையேயான நான்கு வழி சாலையோரமாக உள்ள கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் அந்த வழியாக நேற்று மாலை லாடனேந்தல் மற்றும் திருப்பாச்சேதி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று மானாமதுரை நோக்கி சென்றுக்கொண்டிருந்துள்ளது.


அப்போது கார் எதிர்பாரதவிதமாக கால்வாய்க்குள் விழுந்ததால், காரின் உள்ளே இருந்த 5 பேர் உயிருக்கு போராடியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக காருக்குள் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர்.

இதை அங்கிருந்த மக்கள் பலர் காப்பாற்ற முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த முத்துக்கிருஷ்ணன் (ஓட்டுனர்) என்பவர் உடனடியாக வெள்ளத்தில் குதித்து அந்த 5 பேரையும் தனித் தனியாக மீட்டார்.


முத்துகிருஷ்ணனின் துணிச்சலான இந்த செயலைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரை பாராட்டினர். அதுமட்டுமின்றி அவரின் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.