பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

1330

எச்சரிக்கை..

கடுமையான காற்று மற்றும் இடி மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்களா விரிகுடாவின் தென் கிழக்கு பகுதியில் தொடர்ந்தும் தாழமுக்க நிலைமை நீடித்து வருவதாக தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு இந்த நிலைமை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் இது இலங்கையின் வடபகுதி கரையோரப் பகுதிகளை பாதிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தாழமுக்க நிலைமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேல் மாகாணத்தில் 150 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலையிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் சாத்தியம் உண்டு என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் இடி மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்க்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.