இலங்கையில் தொடர் மழையால் இதுவரை 25 பேர் பரிதாபமாக பலி!!

690

தொடர் மழை..

இலங்கையில் தொடர்ச்சியாக பெய்து கனமழை காரணமாக பல பகுதிகளில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது. அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நிலையத்தினால் வெளியிட்ட ஆலோசனைகளை மீறி செயற்பட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வெள்ள நீரில் மீன் பிடித்தல் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டமையினால் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

எனினும் இன்றைய தினம் வெள்ள நிலைமை ஓரளவு குறைவடைந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. வெள்ள நீர் குறைவடைந்து வருகின்றது.

300 குடும்பங்கள் வரையில் அனர்த்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15 வீடுகள் முழுமையாக சேதடைந்துள்ள 700 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடும் மழை காரணமாக சுமார் 50,000 வீடுகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் கனமழை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அநுராதபுரம், குருநாகல், புத்தளம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிலவிய கடும் வெள்ள நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர், நீர் முகாமைத்துவ பொறியியலாளர் டி அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.