வவுனியாவில் ‘மக்களுக்கு மண் வீதி.. யானைகளுக்கு காபெற் வீதி’ மக்கள் ஆர்ப்பாட்டம்!!

1793

ஆர்ப்பாட்டம்..

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தில் சரியான தெரிவுகள் இடம்பெறவில்லை என தெரிவித்து செட்டிகுளம் பிரதேசசபை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ மக்கள் பிரதிநிதியே அநீதிக்கு துணை போகாதே, வீடுகளுக்கு மண் வீதி காடுகளுக்கு காபெற் வீதியா, மக்களின் தேவைகளை அறியாதவர் வட்டார பிரதிநிதி பதவியில் இருந்து விலகு, மக்களுக்கு மண் வீதி யானைகளுக்கு காபெற் வீதி’ என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகனைளயும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திரக்கட்சியின் (சிறிரெலோ) பிரதேசசபை உறுப்பினர் யூட் கருத்து தெரிவித்த போது, செட்டிகுளம் பிரதேசத்திற்குள் இடம்பெற்று வரும் அநியாயங்களால் எமது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இதனை தட்டிக்கேட்கின்ற அதிகாரத்தினை கொண்டிருக்கும் தவிசாளர் கண்மூடித்தனமாக இருப்பதையிட்டு மனவேதனையடைகின்றோம்.

குறிப்பாக ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பிழையான தெரிவுகள் இடம்பெற்றுள்ளது. மக்கள் குடியிருக்காத, காடுகள் வயல்களுக்கு செல்கின்ற வீதிகளை திருத்தப்பணிகளுக்காக தெரிவு செய்திருக்கின்றார்கள்.

ஒரு குடும்பம், இரு குடும்பம் இருக்கின்ற வீதிகளையும் தெரிவு செய்திருக்கின்றார்கள். அந்த வீதிகளை மாற்றி பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் வீதிகளை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய பதில் தவிசாளரால் வழங்கப்படவில்லை.

எனவே, அவ் வீதிகளுக்கு பதிலாக மக்களால் கோரிக்கை விடுக்கப்படும் வீதியினை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கின்றோம் என்றார்.