கிளிநொச்சியில் வீதி விபத்தில் மாணவி உயிரிழந்ததை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!!

3254


கிளிநொச்சி..



கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இன்று காலை 8 மணி அளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.



இந்த சம்பவத்தை கண்டித்து இன்று சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.




குறித்த போராட்டத்தில் வீதி ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டிய போலீசார் உரிய காலத்தில் கடமையில் இருப்பதில்லை என்றும் வாகன சாரதிகள் விழிப்புணர்வு இன்றி வாகனங்களைச் செலுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உயர்தர அனுமதிக்காக வந்த பாடசாலை மாணவி விபத்தில் பலி!!


கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை நோக்கி மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு,

மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று(15) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


மாணவிகள் ஏ9 வீதியின் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.

இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதி்ல் ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது சம்பவ இடத்திலயே திருவாசகம் மதுசாளினி 17 அகவையுடைய மாணவி பலியானதுடன், மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.