வவுனியாவில் சுகாதார நடைமுறைகள் குறித்து திடீர் சோதனை : இருவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

1753

திடீர் சோதனை..

வவுனியாவில் சுகாதார நடைமுறைகள் குறித்து திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன், இருவருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இன்று (17.11.2021) தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக சுகாதாரப் பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து வவுனியா பழைய பேரூந்து நிலையம் மற்றும் நகரப் பகுதியில் சுகாதார நடைமுறைகள் குறித்து திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது முககவசம் அணியாது நின்றோர், முககவசத்தை சீராக அணியாது நடமாடியோர், சமூக இடைவெளி பேணாதோர் உள்ளிட்ட நபர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.

அத்துடன், முககவசம் அணியாது பழைய பேருந்து நிலையப் பகுதியில் நடமாடிய ஒருவருக்கு எதிராகவும், முகக்கவசம் அணியாது நகரப் பகுதியில் நடமாடிய ஒருவருக்கு எதிராகவும் என இரண்டு பேருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.