நடந்து முடிந்ததை திரும்பவும் கொண்டு வர முடியாது : வவுனியாவில் மாணவர்களிடையே சி.வி.விக்னேஸ்வரன்!!

394

Vigneswaran

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பதின்நான்காயிரம் மாணவ மாணவிகள் இருந்ததாகவும் தற்போது எட்டாயிரம் மாணவ மாணவிகளே உள்ளதாகவும் நான் அறிகின்றேன், இது யுத்தம் காரணமாகவே என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் நேற்று (05.04) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்..

போரின் பின்னர் எமது மாணவர் சமூகம் பெரும் அல்லல்பட்டு மிகவும் அவலமான நிலையில் இருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. அது துரதிஸ்டவசமான விடயம். போரின் காரணமாக உங்கள் குடும்பத்தில் பல பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கின்றீர்கள்.

அவ்வாறு இருதாலும் வருங்காலத்தில் இந்த போட்டிகளும் அறிவு தொடர்பான கல்வியும்தான் எங்களை முன்னேற்றிக்கொண்டிருக்க வேண்டும். அந்த முன்னேற்றத்திற்காக நாம் எல்லோரும் பாடு படுவோமாக. நடந்து முடிந்ததை திரும்பவும் நாம் கொண்டு வர முடியாது.

மாணவ சமுதாயத்தவர்களிடம் நான் கேட்பதெல்லாம் உங்களை நீங்கள் முன்னேற்றிக்கொள்ளுங்கள். இந்த வலயத்திலே பதின்நான்காயிரம் மாணவ மாணவிகள் இருந்ததாகவும் தற்போது எட்டாயிரம் மாணவ மாணவிகளே உள்ளதாகவும் நான் அறிகின்றேன்.

இது போரினால் ஏற்பட்ட துரதிஸ்டவசமான நிலை. ஆனால் வருங்காலத்திலே இவை எல்லாம் மாறி எங்கள் குழந்தைகள் நல்ல நிலையை அடைவார்கள் என்ற எண்ணம் எங்கள் எல்லாரிடமும் உள்ளது என தெரிவித்தார்.