சிறந்த பந்துவீச்சு, சிறந்த துடுப்பாட்டம், அதிகபட்ச ஓட்டங்கள் இன்னும் பல T20 உலகக் கிண்ண சாதனைகள் இலங்கை வசமே!!

466

SL

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2007ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறன. இப்போது நடைபெறுவது 5வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும்.

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் இந்தத் தொடரில், இந்திய மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் இன்று மோதவுள்ளன.

முன்னதாக 2007ம் ஆண்டு கிண்ணத்தை சுவீகரித்த இந்திய அணி, இம்முறை 2வது தடவையாக வெற்றிக் கனியைப் பறிக்கும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ள அதேவேளை, இருமுறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து (2009 மற்றும் 2012) கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை அணி இம்முறை அதிக ஆவலுடன் களமிறங்கும் என்பதில் ஐயமில்லை.

அத்துடன் இலங்கை அணியின் இரு முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் இந்தத் தொடருடன் T20 போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தப் போட்டி இலங்கைக்கு மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

T20 உலகக் கிண்ணத் தொடரில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளாவன…

முதல் 4 உலகக் கி்ண்ணங்களையும் முறையே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் சுவீகரித்துள்ளன.

இந்த தொடர்களில் அதிக போட்டிகளில் தலைவராக இருந்தவர் என்ற பெருமை தோனிக்கு உரியது. இதுவரை 26 போட்டிகளில் அவர் தலைமை வகித்துள்ளனார். இதில் 16 போட்டிகளில் அவர் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.

தோனிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் போல் கோலிங்வுட் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிகபோட்டிக்கு தலைமை வகித்துள்ளார். அவர் 17 போட்டிகளில் தலைவராக இருந்து 8 வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க இருபது ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர், அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமைகள் இலங்கை வசம் உள்ளன.

இலங்கை அணி வீரர் மஹெல ஜெயவர்த்தன இப்போது 4வது உலகக் கிண்ணத்தை எதிர் கொள்கின்றார். இதுவரை 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 992 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதுவே T20 இருபது உலகக் கிண்ணத் தொடரில் ஒரு வீரரின் அதிகபட்ச ஓட்டமாகும். இதில் ஒரு சதம், 6 அரைசதங்கள் அடங்கும். சராசரி 39.68.

இதற்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் 23 போட்டிகளில் பங்கேற்று 807 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 1 சதம், 7 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 40.35.

அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கையின் லசித் மலிங்க முதலிடத்தில் உள்ளார். 30 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் உள்ளார். 23 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 36 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அணிகளின் சாதனையிலும் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. 20 ஓவர் உலகக் கிண்ணத்தில் அதிகபட்சமாக அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை எடுத்துள்ளது. 2007ம் ஆண்டில் கென்யா அணிக்கு எதிராக இலங்கை இந்த சாதனையை படைத்தது.

இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 2007ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்களை எடுத்தது.

20 ஓவர் உலகக் கிண்ணத்தில் மிகக் குறைந்த ஓட்டங்களை எடுத்த மோசமான சாதனை இந்த உலகக் கிண்ணத்தில் தான் படைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணி இலங்கைக்கு எதிராக 10.3 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறி கொடுத்ததே மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்து 15.3 ஓவர்களில் 60 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆகும்.