பள்ளி முதல்வருக்கு பள்ளி வளாகத்தில் அரங்கேறிய பயங்கரம்!!

1046

திருவாரூர்..

திருவாரூர் மாவட்டம் மருதவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா. இவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சத்யாவிற்கு திருமணம் நடந்து 13 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்யாவிற்கு விவாகரத்து ஆன நிலையில் தனது தந்தையான கணேசன் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

சத்யா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேரளத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சத்யா கடந்த இரண்டு தினங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் எப்பொழுதும்போல் பள்ளிக்கு சென்று இருக்கிறார்.

அப்போது பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சத்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சத்யா விஷமருந்தி இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

இருந்தபோதிலும் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் சத்யாவின் தந்தை தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பேரளம் காவல் நிலையத்தில், அவரது தந்தை கணேசன் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் அவரது தந்தை புகாரில் கூறும்பொழுது இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என தனது மகள் கூறி வந்ததாகவும், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவுடன் அவர் உயிரிழந்திருப்பது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் காவல்துறையில் கொடுத்த புகாரில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சத்யாவிற்கு ஏதேனும் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சத்யா பள்ளியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்களை பள்ளி நிர்வாகம் பரப்பி வருவதாக கூறி சத்யாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து பூந்தோட்டம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நீங்கள் கொடுத்த புகாருக்கு வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் சத்யாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.