வவுனியாவில் பண்ணைக்குள் மாடு சென்றமையால் ஏற்பட்ட கைகலப்பில் பெண் உட்பட நால்வாவர் காயம் : மூவர் கைது!!

1244

பூவரசன்குளம்..

வவுனியா, பூவரசன்குளம் பண்ணை ஒன்றுக்குள் மாடுகள் சென்றமையால் ஏற்பட்ட கைகலப்பில் பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றுக்குள் அப் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று வளர்க்கும் மாடுகள் நேற்று (11.12) மாலை உட்சென்றுள்ளதாக பண்ணையில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மாட்டு உரிமையாளர்கள் அவ்விடத்திற்கு சென்ற போது பண்ணையில் இருந்தோருக்கும், மாட்டு உரிமையாளர்களான கணவன், மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த வாய்த்தர்க்கமானது கைகலப்பாக மாறியதில் பெண் ஒருவரும், பண்ணையில் இருந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவத்தையடுத்து பண்ணையில் நின்றவர்கள் வீதியில் சென்ற போது அங்கு வந்த சிலர் அவர்களை வழி மறித்து தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இக் கைகலப்பு சம்பவங்களில் மாட்டு உரிமையாளரின் மனைவியான பெண் மற்றும் பண்ணையில் இருந்தோர் இருவர் என மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பண்ணையில் நின்றவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ சாரதி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பூவரசன்குளம் பொலிசார் அப் பகுதியைச் சேர்ந்த மூவரை இரவு (11.12) கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.