காத்தான் கோட்டம்..
வவுனியா தெற்கு பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மரக்காரம்பளை வீதியில் அமைத்துள்ள காத்தான் கோட்டம கிராமத்தின் உள்ளக வீதி கடந்த 20 வருடங்களாக எவ்வித அபிவிருத்தியுமின்றி தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலமையில் காணப்படுகின்றது.
குறித்த கிராமத்தில் 75க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதுடன் குறித்த உள்ளக வீதியினை செப்பனிட்டு தருமாறு பிரதேச சபை மற்றும் அரசியல்வாதிகள் என பலரிடம் கோரிக்கைகள் முன்வைத்த போதிலும் இதுவரையிலும் எவருமே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
பாடசாலை மாணவர்கள் இவ் வீதியூடாக மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலும் தங்களது பாடசாலை பருவத்தினை கடந்து செல்வதுடன் தொழில் நிமித்தம் செல்பவர்களும் இவ்வீதியினை பயன்படுத்த முடியாத நிலை தற்போது நிலை உருவாகியுள்ளமையினால் மக்கள் மாற்று வீதியினால் பயணத்தினை தொடர்ந்து வருகின்றனர்.
இக் கிராமத்தின் வீதி வீதி புரணமைப்பு தொடர்பில் அக்கிராமத்தில் வசிக்கும் சசிகுமார் டனுசன் என்ற மாணவன் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ் வீதியுடாக தான் தினசரி எனது பாடசாலைக்குச் சென்று வருகின்றேன். மழை பெய்தால் என்னால் பாதணி கூட அணிந்து செல்ல முடியாத நிலையில் இவ் வீதி காணப்படுகின்றது. எனவே உரிய அதிகாரிகள் எமக்கு தற்காலிகமாகவாவது இவ் வீதியினை செப்பனிட்டு தருமாறு கோரிக்கையினை முன்வைத்தார்.
இவ் வீதி தொடர்பாக முதியவர் கருத்து தெரிவித்தபோது ,எனக்கு 74 வயது ஆகின்றது. எனது இந்த முதுமைப்பருவத்தில் இவ் வீதியூடாக என்னால் நடந்து செல்வதற்குக்கூட கடினமாக காணப்படுகின்றது. கடந்த 8 வருடங்களுக்கு மேலாக இவ் வீதி பழுதடைந்து காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
பிரதேச சபை மீது மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையடுத்து வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,
வீதி புரணமைப்பு தொடர்பில் எமக்கு தினசரி பல முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமேயுள்ளது. எம்மிடம் தற்போது குறைந்தளவு நிதியே காணப்படுகின்றது. அவற்றின் ஊடாக எம்மால் தற்போது எம்மால் வீதியினை செப்பனிடும் பணிகளை முன்னெடுப்பது கடினம்.
எனினும் மழையுடான காலநிலை முடிவடைந்தததன் பின்னர் பிரதேச சபையிடம் காணப்படும் இயந்திரங்களை கொண்டு வீதியினை சற்று மறுசீரமைத்து வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.