நெடுங்கேணி..
வவுனியா, நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து அவரை கொலை செய்தமை தொடர்பில் இளைஞர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் கடந்த புதன்கிழமை மோட்டர் சைக்கிளில் சென்ற பெண் மீது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 31 வயதான சத்தியகலா என்ற பெண் மரணமடைந்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெடுங்கேணி பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மரணமடைந்த பெண்ணின் உறவினரான 31 வயது இளைஞர் ஒருவரை அப் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் கைது செய்தனர்.
பொலிசார் குறித்த இளைஞரை கைது செய்ய முற்பட்ட போது அவர் நஞ்சு மருந்தை அருந்தியுள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக நோயாளர் காவு மூலம் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த இளைஞனை தோட்டத்தில் மறைந்து இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிசார் இச் சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.