கொலைக்கு சாட்சியாக நாயை நீதிமன்றுக்கு வருமாறு அழைப்பு!!

469

Dogகொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப நீதிமன்று உத்தரவிட்டது.

பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் செல்லமாக வளர்த்த டாங்கோ என்றழைக்கப்படும் லேப்ரடார் இன நாய், கொலையை பார்த்துள்ளது.

இதனால் கொலை வழக்கில் டாங்கோவை சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து கொலையாளியை அடையாளம் காட்டுவதற்காக நாயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

சம்பவத்தன்று மர்ம ஆசாமி பேட்டால் அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அதனால் சந்தேகப்படும் நபரை பேட்டுடன் நாய்க்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினால், அது குரைத்து அடையாளம் காட்டும் என்று அரசு தரப்பினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கு எதிர்தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொலையாளியை நாய் அடையாளம் காட்டும் என்பது அறிவுக்கு புறம்பானது. நாய் வந்து குரைத்தாலோ அல்லது வாலாட்டி குழைந்தாலோ அது எனது கட்சிக்காரரை ஏற்றுக் கொண்டதாக எதை வைத்து சொல்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

எனினும் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் நாய் முன்பு நிறுத்தினார். ஆனால், நாய்தான் குரைக்கவில்லை.

இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஒரு வழக்கில் நாயை சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போதும் நாய் குறிப்பிட்ட நபரை அடையாளம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.