மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதம் நிறைவு : தொடரும் தேடுதல்!!

294

Missing-Malaysian-plane

மலேசியா பயணிகள் விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. விமானம் கடலுக்குள் விழுந்ததாக அறிவிக்கப்பட்டாலும் அதற்கான தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

விமான கருப்புப் பெட்டியின் பட்டரி இன்றுடன் செயலிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் , அதை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக அவுஸ்திரேலிய அரசு, இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து சில சிக்னல்களை கண்டறிந்ததாக கூறியது.

விமான கருப்புப் பெட்டியில் இருந்து வரும் சிக்னல்களாக கருதப்பட்டு, அதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பெர்த் பகுதிக்கு வடமேற்கே உள்ள கடல் பகுதியில் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மலேசிய பயணிகள் விமானம், சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது.

பல்வேறு விசாரணைகளை அடுத்து , செயற்கைக் கோள்களின் தகவல்கள் அடிப்படையில் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அறிவித்தது.

இந்நிலையில் பயணிகளின் நிலை பற்றி எதுவும் தெரிய வராததால், உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடலுக்குள் விமானம் விழுந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானோர் அதனை ஏற்க மறுக்கின்றனர்.

இதனிடையே பயணிகள் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சீனாவின் பெய்ஜிங் நகரில் பொதுமக்கள் ஒன்று கூடி , மெழுகுவர்த்தி ஏற்றி தங்களின் சோகத்தை பகிர்ந்து கொண்டனர்.

பயணிகளின் உறவினர்கள் சோகத்தை மறந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். விமான பயணிகளில் பெரும்பாலானோர் சீனர்கள்.

இந்நிலையில், மலேசிய அரசு விமான தேடுதலில் முறையாக கவனம் செலுத்தவில்லை என சீன மக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.