வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு நிறைவேறியது : சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசம் சென்ற சபை!!

849

சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசம் சென்ற வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நேற்று (27.12) நிறைவேறியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமிருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு முன்னாள் தலைவர் சு.தணிகாலம் அவர்களால் முன்வைக்கப்பட்டு இரண்டு தடவைகள் தோல்வியடைந்த நிலையில் புதிய தவிசாளர் தெரிவு அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியிருந்ததுடன், ஈபிஆர்எல்எப் கட்சி உறுப்பினர்கள் இருவரும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்ததாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், சபையின் புதவி தவிசாளர் த.பார்த்தீபன் அவர்களால் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய பாதீடு சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது.

பாதீடு மீதான விவாதங்கள் இடம்பெற்ற பின் பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது சில உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பு கோரியதையடுத்து பாதீடு இரகசிய வாக்கெடுப்பா அல்லது பகிரங்க வாக்கெடுப்பா என தீர்மானிக்கும் பொருட்டு சபை உறுப்பினர்களின் கருத்து பெறப்பட்டது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு -08, தமிழ் தேசிய மக்கள் முன்னனி-03, ஈபிஆர்எல்எப் -01, ஜேவிபி -01 என 13 பேர் பகிரங்க வாக்கெடுப்பையும், பொதுஜன பெரமுன -05, சிறிலங்கா சுதந்திரக் கட்சி -02, ஈபிஆர்எல்எப் -02, ஐக்கிய தேசியக் கட்சி -03, சுயேட்சை -01 என 13 பேர் இரகசிய வாக்கெடுப்பையும் கோரினர்.

இரண்டும் சமனிலை பெற்றிருந்த நிலையில் தவிசாளர் தனக்கு இருந்த ஒரு மேலதிக வாக்கைப் பயன்படுத்தி இரகசிய வாக்கெடுப்புக்கு சென்றிருந்தார்.

இதில் பாதீட்டுக்கு ஆதரவாக 15 வாக்குகளும், பாதீட்டு எதிராக 11 வாக்குளும் கிடைத்தன. இதனால் 4 மேலதிக வாக்குகளினால் பாதீடு வெற்றி பெற்றது. இதன்மூலம் சுதந்திரக் கட்சி தனது ஆட்சியை வவுனியா வடக்கு பிரதே சபையில் உறுதிப்படுத்திக் கொண்டது.