
மதுரை..
மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் நாகவேல். பெயிண்டராக வேலைப்பார்த்து வந்த இவருக்கும் அலங்காநல்லூர் அய்யங்கோட்டையைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் 24ம் தேதிதான் திருமணமாகியிருக்கிறது.
திருமணத்துக்கு பின் தாய் மற்றும் சகோதரருடன் அதே வீட்டிலேயே நாகவேல் வசித்து வந்திருக்கிறார். ஆனால் தனிக்குடித்தனம் போக வேண்டும் என சுதா வலியுறுத்தியிருக்கிறார். இதனால் நாகவேல் சுதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டுக்கு வந்த நாகவேலிடம் மீண்டும் சுதா தனியாகச் செல்வது குறித்த பேச்சை எடுத்திருக்கிறார். அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் நாகவேல் சுதாவின் கழுத்தை நெரித்திருக்கிறார்.
இதனால் நிகழ்விடத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுதா உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் நடந்ததைக் கூறி நாகவேல் சரணடைந்திருக்கிறார்.
அப்போது போலிஸிடம் திருமணத்துக்கு பிறகுதான் என்னைவிட சுதாவுக்கு வயது அதிகம் என தெரியவந்தது. இந்த அதிர்ச்சியோடு இருந்தபோதுதான் தனிக்குடித்தனத்துக்குச் செல்லவேண்டும் எனக் கூறியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இதேபோலவே நேற்றும் பிரச்னை நடந்தது. அப்போது ஆத்திரத்தில் கழுத்தை நெரித்தேன். ஆனால் இறக்கும் அளவுக்கு ஆகும் என எதிர்ப்பார்க்கவில்லை என கூறியிருக்கிறார்.
நாகவேலின் வாக்குமூலத்தை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற மதுரை மாநகர தெற்கு துணை கமிஷ்னர், திடீர் நகர் உதவி கமிஷ்னர் இருவரும் சுதாவின் உடலை பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இதற்கிடையே திருமணமாகி இரண்டு மாதமாகியும் சுதா கர்ப்பமாகதாலும், தன்னைவிட வயது அதிகம் கொண்டதாலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் இவ்வாறு நடந்திருக்கும் என சந்தேகம் கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.