மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

925

சென்னையில்..

சென்னையில் ஓன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த வங்கி அதிகாரி மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

சென்னை பெருங்குடி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன் (45). இவர் மனைவி ப்ரியா (40). தம்பதிக்கு 10 வயதில் தரண் மற்றும் ஒரு வயதில் தாஹன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.
மணிகண்டன் போரூரில் உள்ள லண்டனை தலைமையகமாக கொண்ட பிரபல வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். ஆண்டு வருமானமாக ரூ.28 லட்சம் சம்பளம் பெற்று வந்துள்ளார்.


சூதாட்டத்தில் விருப்பம் கொண்ட மணிகண்டன் அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அதன் மீதான ஆசையில் மணிகண்டன் ஒரு கட்டத்தில் நண்பர்களிடம் ரூ 75 லட்சம் கடன் வாங்கி ஓன்லைன் சூதாட்டத்தில் விளையாடி ரூ 1 கோடிக்கு மேல் இழந்தார்.

இதை குடும்பத்தாரிடம் சொல்லாமல் மனதுக்குள் புழுங்கியபடி இருந்தார். இந்த நிலையில் மணிகண்டனுக்கு கடன் கொடுத்த நண்பர்கள் அவர் வீட்டுக்கு வந்து பணத்தை திருப்பி கேட்ட போது அவர் மனைவி ப்ரியாவுக்கு உண்மை தெரிந்தது.


இது குறித்து கணவரிடம் கேட்ட போது ஆத்திரமடைந்த மணிகண்டன் மனைவி தலையில் கிரிக்கெட் மட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்தார். பின்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்ற மணிகண்டன், ஆத்திரத்தில் புத்தி கெட்டு இப்படி செய்துவிட்டோமே என பயந்து ஒரு மணி நேரமாக அழுதுள்ளார்.

பின்னர் சமையல் அறைக்கு சென்று தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மணிகண்டன். இவை அனைத்தும் பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.