
தென்னாபிரிக்காவில் நடந்த முதல் T20 உலக கிண்ணத்தை இந்தியா வென்றது. இந்த வெற்றிக்கு மூல காரணமாக அப்போது யுவராஜ் திகழ்ந்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் அப்போது ஒரே ஓவரில் அவர் அடித்த 6 சிக்சர்கள் சாதனையின் சிகரமாக திகழ்கிறது.
அப்போது அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். ஆனால், இன்று தனது எல்லா புகழையும் இழந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வில்லனாக தெரிகிறார் யுவராஜ் சிங்.
பங்களாதேஷில் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு யுவராஜ் சிங் மட்டுமே காரணம் என்று கருதுகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.
இறுதிப்போட்டியில் இந்திய அணி குறைந்த பட்சம் 150 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதிரடி நாயகன் யுவராஜ் சிங்கை களமிறக்கினார் டோனி. ஆனால், அவரது நம்பிக்கையை தகர்த்தது மட்டுமின்றி, இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த இதயமும் நொறுங்கும் வகையில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் யுவராஜ் சிங்.
21 பந்துகளில் 11 ஓட்டங்களை எடுத்து துடுப்பாட்டத்தில் சொதப்பிய யுவராஜ், இந்திய அணியின் ரன் வேகத்தை கடைசி ஓவர்களில் குறைந்ததன் மூலம் 130 ஓட்டங்களுக்குள் சுருள வைத்து விட்டார். இதனால், ஒரே நாளில் இந்திய ரசிகர்களின் மனதில் வில்லனாக உருவெடுத்துள்ளார் யுவராஜ்.
இவரது மந்தமான ஆட்டத்தை வெளிநாட்டு கிரிக்கெட் விமர்சகர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். உடல் நிலை பாதிப்பில் இருந்து மீண்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள யுவராஜ் தொடர்ந்து போமில் இல்லாத நிலையில் அவர் அணிக்கு தேவையற்ற சுமை என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர்.
T20 உலக கிண்ணத்தை இந்தியா இழக்க காரணமான யுவராஜ் சிங், இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. ஆனால், யுவராஜ் சிங்குக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு உலக கோப்பையை தக்க வைக்க யுவராஜ் சிங்கின் பங்களிப்பு தேவைப்படும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் மந்தமான துடுப்பெடுத்தாட்டதால் ஏற்பட்ட தோல்வி பஞ்சாப் மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் உள்ள யுவராஜ் சிங் கின் வீடு மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இது குறித்து சண்டிகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





