வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக முறைப்பாடு!!

1515


வவுனியா வைத்தியசாலை..வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள், மற்றும் நோயாளர்களை பராமரிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகின்றது.வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெற வருகின்றவர்கள், மாதாந்த கிளினிக் சேவையை பெற வருகின்ற நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருகின்ற உறவினர்கள் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கொட்டகையில் வைத்து விசாரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுவதாக நோயாளர்கள் விசனம் வெளியிட்டனர்.
வவுனியா பொது வைத்தியிசாலை நிர்வாகத்தினால் கொரோனா பரவாமல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் காரணமாகவே நோய் தொற்று வேகமாக பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள கொட்டகையில் மக்களும், நோயாளர்களும் நெருக்கமாக இருப்பதன் காரணமாக வேகமாக தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

வைத்தியசாலை காவலாளிகள், இராணுவத்தினர் போன்று விசாரணை செய்து நோயாளர்களை வைத்தியசாலைக்குள் அனுமதிப்பதாக மக்கள் கவலை வெளியிட்டனர்.

அத்துடன் வைத்தியசாலையில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளர்கள் ஐந்நூறு மீற்றர் தூரம் சுற்றியே சிறிறுண்டிச்சாலைக்கு செல்ல வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.


வைத்தியசாலையின் உள்ளே இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலை தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வெளியே உள்ள சிற்றுண்டிச்சாலைகளை நோக்கி செல்வதால் நோய் பரவக்கூடிய அபாயம் அதிகமாக காணப்படுவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தம் காரணமாக, நோயாளர்களும், வைத்தியசாலைக்கு மருத்துவ சேவை பெறும் நோக்கில் செல்பவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.