ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

951


திருப்பதி..கல்லூரி விடுதியில் தங்கி படிக்குமாறு பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் என்ஜினியரிங் மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி அடுத்த காளஹஸ்தி தொட்டம் பேடு மண்டலம் காராக்கொல்லு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் சைதன்யா நெல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் காளஹஸ்தியிலிருந்து தினமும் நெல்லூர் சென்று படித்து வருவதில் சிரமம் ஏற்படுவதால் கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக்குமாறு அவரது பெற்றோர் சைதன்யாவிடம் கூறி வந்துள்ளனர்.


ஆனால், கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க விருப்பமில்லாத சைதன்யா வீட்டிலிருந்தே படிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், சைதன்யாவின் பெற்றோர் இந்த ஒரு வருடம் மட்டும் விடுதியில் தங்கி படிக்குமாறு அவரை கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பிறகு வேறு வழியில்லாமல் கல்லூரி விடுதிக்கு சென்ற சைதன்யா புத்தாண்டுக்கு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோருடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடிய சைதன்யா காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.


அப்போது விடுமுறை முடிந்ததும் தன்னை மீண்டும் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க அனுப்பி விடுவார்களோ? என எண்ணி விரக்தியில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த சைதன்யா காளஹஸ்தி அருகே செல்லும் தெலுங்கு கங்கை திட்டம் ஆற்றங்கரைக்கு சென்று கரையில் தனது செல்போனை வைத்துவிட்டு ஆற்றில் குதித்து உள்ளார்.

சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற ஒருவர் ஆற்றங்கரையில் செல்போன் இருப்பதைக் கண்டு அந்த செல்போன் மூலம் சைதன்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் ஆற்றில் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை தொட்டம் பேடு அருகே சைதன்யாவின் உடல் கரையோரம் ஒதுங்கிய நிலையில், அதனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து தொட்டம் பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி விடுதியில் தங்குவது தான் தற்கொலைக்கு காரணமா? இல்லை வேறு எதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.