பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் பலர் பலி: இராணுவம் களத்தில்!!

509


கடும் பனிப்பொழிவு..பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் பயணித்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் முர்ரி என்ற மலை உச்சி நகருக்கு அருகில் இன்னும் பனிப்பொழிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.பனிப்புயலின் போது சுமார் 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் தெரிவித்தார்.
முர்ரி என்பது தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வடக்கே உள்ள ஒரு மலை உல்லாச நகரமாகும். இந்தநிலையில் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகளும் சிக்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


வழக்கத்திற்கு மாறாக கடுமையான பனிப்பொழிவைக் காண்பதற்காக அண்மை நாட்களில் 100,000க்கும் அதிகமான கார்களில் பலர் முர்ரிக்கு சென்றிருந்தனர். இதனால் நகருக்குள் மற்றும் வெளியே செல்லும் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்போது அந்தப் பகுதி பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டு, மக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 15 முதல் 20 ஆண்டுகளில் முதன்முறையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் முர்ரேயில் ஒன்று கூடினர்.


இதேவேளை பிரதமர் இம்ரான் கான், சுற்றுலாப் பயணிகளின் “சோக மரணம்” குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.