விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம் : உலக சாதனையாளன் பி.லவனீஸ்!!

1199


லவனீஷ்..



படித்து விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம் என அண்மையில் உலக சாதனை படைத்த பிரபாகர் லவனீஸ் தெரிவித்துள்ளார். நாட்டிக்கும் பிறந்த மண்ணிக்கும் பெருமை சேர்த்து தந்தமைக்காக பிறந்த மண்ணில் அவரை பாராட்டும் வைபவம் ஒன்று சமூக சேவையாளரும் மலையக அரசியல் அரங்கத்தின் பிரதான அமைப்பாளருமான ஆர்.செந்தூரனின் ஏற்பாட்டில் கொட்டகலையில் நேற்று மாலை (10.01) நடைபெற்றது.



இதில் பாராட்டு பெற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பிரபாகர் லவனீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். விபரம் தெரிந்த வயதில் இருக்கும் போது எனது தாத்தா ஒரு உலக உருண்டையினை கொண்டு வந்து அதில் உள்ள உலக நாடுகளை அடையாளம் காணுவதனை எனக்கு கற்றுத்தந்தார்.




அதனை கருத்தில் கொண்டு நான் உலக நாடுகளை அடையாளம் காணுவதில் உலக சாதனையினை படைத்துள்ளேன். இதனை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது இன்னும் சாதனைகளை நிலை நாட்ட வேண்டும் என்ற ஆர்வமும் தோன்றுகிறது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.


இந் நிகழ்வில் கல்வி சமூத்தினராலும்,பிரதேச நலன் விரும்பிகனாலும் மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பலரால் வாழ்த்துரைகளும் வழங்கப்பட்டன.

கொட்டகலையைச் சேர்ந்த பிரபாகர் ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவனீஷ் மிக இள வயதில் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளை அடையாளம் காணும் சாதனையை படைத்துள்ளார்.

அதி வேகமாக உலக நாடுகளை உலக வரைப்படத்தின் அனைத்து நாடுகளையும் துல்லியமாக அடையாளம் காட்டியுள்ளார். அதற்காக 3 நிமிடங்கள் 16 செக்கன்களை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வித அடையாளங்களோ அல்லது எந்தவிதமான எழுத்துக்களோ இல்லாத நிறங்களில் மட்டும் நாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட உலக வரைபடத்தில் லவனீஷ் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.


இங்கு உரையாற்றியவர்கள் உலக சாதனை என்பது ஒரு சாதாரண விடயமல்ல இவ்வாறு உலக சாதனை படைக்கக்கூடியவர்கள் எமது மண்ணில் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் முன்வருதற்கும் எமது மண்ணுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதற்கும் இவ்வாறான பாராட்டுக்கள் அவசியமாகும்.

இது இத்துடன் நின்று விடாது திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறானவர்களை பாராட்டுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமையினையிட்டு பெருமையடைவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.

இவ் கௌரவிப்பு விழாவுக்கு ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரியின் பகுதி நேர விரியுரையாளர் செல்வராஜ், கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் முன்னாள் வர்த்தக சங்க தலைவர், சமூக சேவையாளர்கள்,அதிபர்கள் ஆசிரியர்கள் அவரது பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.