இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இந்திய எரிபொருள் நிறுவனம்!!

1103

இந்திய எரிபொருள் நிறுவனம்..

இலங்கை மின்சார சபைக்கு மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகம் தொடர்பில் மின்சக்தி அமைச்சு விடுத்த கோரிக்கையை லங்கா இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் நிராகரித்துள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். தற்போது கூடுதல் எரிபொருள், தமது கையிருப்பில் இல்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தடையற்ற மின்சார விநியோகத்தை பேணுவதற்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இன்று மின்சக்தி அமைச்சு மற்றும் இந்திய எரிபொருள் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது இது தெரிவிக்கப்பட்டது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் ஜனவரி 22 ஆம் திகதி வரை மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை இலங்கை மின்சார சபை, இந்திய எரிபொருள் நிறுவனத்திடம் கோரும் என அமைச்சர் லொக்குகே முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அமைச்சின் கோரிக்கையை, இந்திய எரிபொருள் நிறுவனம் நிராகரித்த போதிலும், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் தாங்கியில் இருந்து எரிபொருளை பெறுவதற்கு தேவையான வசதிகள் இன்றைய தினத்திற்குள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் மத்திய வங்கி ஆளுநரிடமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த எண்ணெய் தாங்கியில் இருந்து எரிபொருளை வழங்க முடியாவிட்டால், சுமார் 90 நிமிடங்களுக்கு மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.