இலங்கை இருளில் மூழ்குவதை யாராலும் தடுக்க முடியாது : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

1511


மின்வெட்டு..



இலங்கை மின்சார சபை நாளுக்கு நாள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இயங்குவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.



நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் “மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் இருவரும் இழுபறி நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.




நாட்டு மக்களுக்கு உண்மையை கூற இருவரும் தவறியுள்ளனர். களனிதிஸ்ஸ மற்றும் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்களில் எண்ணெய் கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இன்றைய தினத்திற்குள் மின் உற்பத்திற்கான எண்ணெய் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும்.


அவ்வாறு இல்லாவிடின் பாரிய நெருக்கடிக்கு இலங்கை மக்கள் முகம்கொடுக்க நேரிடும். அடுத்து வரும் இரண்டு மூன்று நாட்களில் இலங்கை இருளில் மூழ்குவதை யாராலும் தடுக்க முடியாது.

ஐஓசி நிறுவனத்துடன் பேசி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடிவுசெய்திருப்பதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சப்புகஸ்கந்த மற்றும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையங்களில் நேற்று பிற்பகல் முதல் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் உழை எண்ணெயை பயன்படுத்தியும், களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் டீசலையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது. இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் செயலிழந்ததன் காரணமாக 100 மெகாவாட்களுக்கு மேல் தேசிய மின்கட்டமைப்பை இழந்துள்ளன.

இதன் காரணமாக நாளாந்த மின்சார விநியோகத்தை முறையாக சீரமைக்க முடியவில்லை எனவும், சில பகுதிகளில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, கொழும்பு துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதன்படி 37,000 மெட்றிக் தொன் எரிபொருள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிலிருந்து 10,000 மெட்றிக் டன் எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று (19) முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை நாளாந்தம் 1,000 மெட்றிக் தொன் எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-