பைசர் தடுப்பூசி பாலியல் பலவீனத்தை ஏற்படுத்துமா? நிபுணர்கள் வெளியிட்ட தகவல்!!

1952

பைசர் தடுப்பூசி..

கோவிட் எதிர்ப்பு தடுப்பூசி வகைளில் ஒன்றான பைசர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதனால் பாலியல் ரீதியாக பலவீனத்தை ஏற்படுத்தாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பைசர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதனால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் எனவும், பாலியல் ரீதியான பலவீனங்கள் ஏற்படும் எனவும், மாதவிடாய் சக்கரத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் சர்மிளா டி சில்வா இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தொடர்ந்தும் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,

எம்மிடம் சில நோயாளிகள் வருகின்றார்கள். இடுப்பு வலி, வயிற்றுவலி, இரண்டு மூன்று நாட்கள் இருமல் என கூறுகின்றனர். ஒரு மாத காலத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட தடுப்பூசியினால் இவ்வாறு ஏற்பட்டது என அவர்கள் கருதுகின்றார்கள்.

தடுப்பூசி ஏற்றிக்கொண்டதன் பின்னர் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தடுப்பூசியே காரணம் என கருதுகின்றார்கள். இது மக்களின் மத்தியில் நிலவி வரும் மூட நம்பிக்கையேயாகும்.

இளைஞர், யுவதிகள் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில்லை. பாலியல் பலவீனம் ஏற்படும், மாதவிடாய் சக்கரத்தில் மாற்றம் ஏற்படும், குழந்தை பேறின்மை ஏற்படும் என அவர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகள் பைசர் தடுப்பூசியினால் ஏற்படப்போவதில்லை என டொக்டர் சர்மிளா டி சில்வா கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.