இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை : மீண்டும் எப்போது மின்வெட்டு?

921

மின்வெட்டு..

இன்று முதல் நாளை மறுதினம் வரை மின்வெட்டுக்கான அவசியமில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் ஜனவரி 27ஆம் திகதி பரிசீலிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எனினும், இந்த 3 நாட்களில் மின்சாரம் தயாரிக்க போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) தற்போதுள்ள எரிபொருட்களின் இருப்புக்கள், அவற்றை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கக்கூடிய திகதிகள் பற்றிய தகவல்களும் கோரப்பட்டுள்ளன.

இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு மசகு எண்ணெய் கையிருப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆம் அலகின் மூலம் இம்மாத இறுதிக்குள் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.