வவுனியா மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு 3 மணித்தியாலயத்திற்கு மேலாக போராட்டம்!!

873

போராட்டம்..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று (26.01.2022) காலை 9.30 மணி தொடக்கம் 1.00 மணி வரையிலான சுமார் 3 மணித்தியாலயத்திற்கு மேலாக வவுனியா மாவட்ட செயலக வளாகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஊடான நீதிக்கான அணுகல் (ACCESS TO JUSTICE) எனும் விசேட நடமாடும் சேவை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ் விசேட செயற்றிடத்தின் கீழ் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பனவும் உள்ளடங்கி காணப்படுகின்றதுடன் காணாமல் போனவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களும் திரப்படுகின்றன.

இச் செயற்றிட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பாக காலை 9.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றினை செயற்படுத்தும் அதிகாரிகளுடன் தாம் கதைப்பதற்கு சந்தர்ப்பம் கோரி போராட்ட பதாதைகள் மற்றும் கறுப்பு கொடிகளுடன் மாவட்ட செயலகத்தினுள் செல்ல முற்பட்டனர்.

மாவட்ட செயலகத்தினுள் நுழைந்த அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் இருவரை மாத்திரம் உட்சென்று கதைக்குமாறும் கோரிக்கையினை முன்வைக்குமாறும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் பொலிஸாரின் கோரிக்கைக்கு போராட்டகாரர்கள் மறுப்பு தெரிவித்து அனைவரும் உட்செல்லுவோம் அல்லது அவர்கள் இவ்விடத்திற்கு வருகை தரவேண்டும் என தெரிவித்தனர்.

போராட்டம் வலுப்பெற்றமையினையடுத்து மாவட்ட செயலகத்திற்கான பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டதுடன் மாற்று வீதியுடாக போக்குவரத்து ஏற்படுத்தி வழங்கப்பட்டிருந்தது.

வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. தினேஷ்குமார் போராட்ட இடத்திற்கு வருகை தந்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடினார் . எனினும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரும் ஒன்றாகவே செல்வோம் என தெரிவித்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரின் தடையினை மீறி மாவட்ட செயலகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்திற்கு செல்ல முற்பட்ட சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

அதன் பின்னர் வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் அலுவலகர்களுடன் கலந்துரையாடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள குறித்த காரியாலயம் வரை அழைத்துச் சென்றிருந்தனர்.

அதன் பின்னர் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் அலுவலகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் நோக்கம் மற்றும் செயற்றிட்டத்தினை தெளிவுபடுத்தியிருந்தனர்.

மேலும் நீதி அமைச்சர் எம்.யு.எம் அலி சப்ரியுடன் நேரில் கலந்துரையாடவும் கோரிக்கைளை முன்வைக்கவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்திருந்தனர்.

தமக்கு சர்வதேச ரீதியிலேயே விசாரணை வேண்டும் மற்றும் காணாமல் போனவர்கள் என அலுவலகம் வைக்க வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என அலுவலகம் வைக்க வேண்டும் எனவும் அரசின் செயற்பாடுகளில் எமக்கு நம்பிக்கையில்லை என தெரிவித்து மாவட்ட செயலகத்தினை விட்டு வெளியேறியிருந்தனர்.