வவுனியாவில் நீதி அமைச்சின் வடமாகாணத்திற்கான முதலாவது நடமாடும் சேவை ஆரம்பம்!!

1163

நடமாடும் சேவை..

நீதி அமைச்சின் வடமாகாணத்திற்கான முதலாவது நடமாடும் சேவை வவுனியாவில் இன்று (26.01.2022) நடைபெற்றது.

நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஊடான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் ‘நீதிக்கான அணுகல்’ எனும் விசேட நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக வடமாகாணத்திற்கான முதலாவது நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நீதி சேவை ஆணைக்குழுவின் சிரேஸ்ட உதவி செயலாளர் ரோகிணி கெட்டிகே தலைமையில் இன்று (26.01) காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

இதன்போது, பொதுமக்களை பாதிக்கும் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டல், நல்லிணக்கம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துதல், வடமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் ஆலோசனை வழங்கல்,

பிறப்பு- திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுதல், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் சேவைகளை வழங்குதல் என்பன முன்னெடுக்கப்பட்டன.

நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சுக்களின் கீழுள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் சேவை நிலையம், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, இலங்கை மத்தியஸ்தர் சபைகள் ஆணைக்குழு,

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் கலந்து கொண்டு மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளையும், பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் தெளிவுபடுத்தினர்.

இந் நிகழ்வில் நீதி சேவை ஆணைக்குழு பணிப்பாளர் சந்திக்க லொக்கு கெட்டி, நீதி சேவை ஆணைக்குழுவின் சிரேஸ்ட உதவி செயலாளர் ரோகிணி கெட்டிகே,

நீதி சேவை ஆணை குழுவின் உதவி செயலாளர் சந்திர மாலனி, இழப்பிட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நாசிமா அகமட், மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.