13 ஆவது திருத்த சட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆதரவு கோரிய சுமந்திரன் : பாராளுமன்ற உறுப்பினர் திலீபன்!!

1476

13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுமந்திரன் ஆதரவு கோரினார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (27.01) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் தற்போது விழிப்படையக் கூடிய தருணம். 13 ஆவது திருத்தச் சட்டத்தை கஜேந்திரன் தரப்பு எதிர்க்கிறது. கூட்டமைப்பு அதனை ஆதரிக்கிறது.

நாடாளுமன்ற விருந்தினர் விடுதியில் நானும், எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இருந்த போது சுமந்திரன் வந்து ‘அண்ணா 13வது திருத்தச் சட்டம் சம்மந்தமாக தமிழ் எம்.பிமார் சேர்ந்து கலந்துரையாடி அதனை வலுப்படுத்துவோம் என்றார்’.

அப்போது நானும் அதற்கு உறுதுணையாக இருப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். சுமந்திரன் சென்ற பின் எமது அமைச்சரிடம் ‘ எனக்கு அனுபவம் தெரிந்த நாள் முதல் நீங்கள் இதனைச் சொல்லி வருகிறீர்கள்.

இன்றைக்குத் தான் சுமந்திரனுக்கு ஞானம் பிறந்துள்ளது. இன்றைக்கு உங்களிடம் வந்துள்ளார்கள்.’ என்ற போது அவர்களுக்கு இப்போது தான் ஞானம் வந்துள்ளது.

அதனை நாமும் முன் மொழிவோம் என்றார். அப்படி தான் தற்பொழுது நடக்கிறது. 13 வது திருத்தச் சட்டம் அன்றிலிருந்து இன்று வரை நாம் சொல்லி வந்த விடயம்.

இப்போது அந்த இடத்திற்குத் தான் வந்துள்ளார்கள். மக்கள் தான் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும். கூட்டமைப்பா, கஜேந்திரகுமாரா என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இரண்டும் தரப்பாலும் பயனில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.