வவுனியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கௌரவிப்பு!!

1758

கௌரவிப்பு நிகழ்வு..

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு வவுனியாவில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் நிலக்சன் தலைமையில் இன்று (29.01) இந்நிகழ்வு இடம்பெற்றது.

கோவிட் தொற்றுக்கு எதிராக இலங்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கோவிட் தடுப்பூசியின் முதலாம், இரண்டாம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பில் விளக்களிக்கப்பட்டதுடன்,

அதனை வெற்றிகரமாக செலுத்துவதற்கு காரணமாக இருந்த வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் ஆகியோருக்கும், ஒத்துழைப்பு நடவடிக்கைளை வழங்கிய பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், விமானப் படையினர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் இதன்போது நினைவு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன், பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்,

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.