வவுனியாவில் ஆயுதத்துடன் சிக்கியவர்களே உரும்பிராய் கொள்ளையின் சூத்திரதாரிகள்!!

401

A4வவுனியாவில் போலித் துப்பாக்கிகள், இலக்கத்தகடுகள் மற்றும் கையுறைகளுடன் சொகுசுக்காரில் பயணித்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களுக்கும், உரும்பிராயில் சொகுசுக்காரில் வந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தொடர்புள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

யாழ். நீதிமன்றில் நேற்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போதே கொள்ளையில் ஈடுபட்ட இருவர் அடையாளம் காணப்பட்டனர். வவுனியாவில் கடந்த 28ஆம் திகதி 5 பேரை சொகுசு காருடன் பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் நேற்று யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பதில் நீதிவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. அதில் சந்தேக நபர்கள் உட்பட 40 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

அதன்போது உரும்பிராயில் சுமார் 20 பவுண் நிறையுடைய நகைகளைப் பறிகொடுத்தவர்கள் இருவரை அடையாளங்காட்டினர். அதையடுத்து சந்தேகநபர்களுக்கு மீண்டும் 14 நாள்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் உரும்பிராயில் சொகுசுக்காரில் ஆயுதங்களுடன் வந்த குழு வீடு புகுந்து கொள்ளைடித்தது. அதில் பெருமளவு நகைகள் கொள்ளையிடப்பட்டன. இந்தச் சம்பவம் நடந்து ஒருவாரம் கழிந்த நிலையில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த சொகுசுக்கார் ஒன்றை வவுனியாப் பொலிஸார் எதேச்சையாகச் சோதனையிட்டனர்.

அந்தக் காரில் போலியான துப்பாக்கிகள், வாகன இலக்கத்தகடுகள் மற்றும் கையுறைகள் காணப்பட்டதை அடுத்து அதிலிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவரே தற்போது அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனையில் மெடிக்கல் சென்ரர் ஒன்றை இயக்கிவருபவரான பாலசிங்கம், அதே இடத்தைச் சேர்ந்தவர்களான இராஜேந்திரன் தம்பிராசா, ஆனந்தராசா, விஸ்வநாதன் ஆகியோரும் யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த அன்னலிங்கம் அகிலன் ஆகிய 5 பேருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.