அரசியல்வாதிகளிடம் கொடுத்து வாங்கும் பக்குவம் மலர வேண்டும் : வடக்கு முதல்வரின் புத்தாண்டுச் செய்தி!!

342

CV

தமிழ்ப் பேசும் மக்களினதும் சிங்களம் பேசும் மக்களினதும் பொதுவான பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதத்தில் இரு சாராரையும் ஒருங்கு சேர்த்து கொண்டாட வைப்பதுதான் சித்திரைப் புத்தாண்டு.

எமது இருதரப்பு அரசியல்வாதிகளும் இப்பேர்ப்பட்ட பொது விடயங்களைப் போற்றிப் பேசாது எமது வேற்றுமைகளையே முன்னிறுத்தி வந்துள்ளனர். அதன் காரணமாகத்தான் இன்று நாட்டில் ஒரு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மனிதர்களாகப் பிறந்த நாம் அனைவரும் செழிப்பு, மகிழ்ச்சி, அமைதி, மனநிறைவு ஆகியவற்றையே எம் வாழ்க்கையில் எதிர்பார்க்கின்றோம். இவற்றைப் பெறவேண்டுமானால் எம் எல்லோர் இடையேயும் கொடுத்து வாங்கும் பக்குவம் மலரவேண்டும்.

சிறுபான்மையினர் சில விடயங்களைப் பெரும்பான்மையினரிலும் பார்க்க நல்ல விதமாக நடத்திக் கொண்டு போகின்றார்கள் என்ற காரணத்திற்காகப் பெரும்பான்மையினர் கோபம் கொண்டு சிறுபான்மையினருக்குத் தீங்கு விளைவிக்க எண்ணுவது தவறு.

பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர்களிலும் பார்க்கச் சிறப்பாக ஆற்றினார்கள். அதற்காக ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர்களுக்குத் தீங்கிழைக்கவோ, தொல்லை கொடுக்கவோ, பக்கச் சார்பாக அவர்களுக்கு எதிராக நடந்து கொள்ளவோ ஆங்கிலேயர்கள் எத்தனிக்கவில்லை. அதனால்த்தான் பிரித்தானியா உலகின் பலம் மிக்க நாடுகளில் ஒன்றாக இன்றும் இடம் வகிக்கக் கூடியதாக இருக்கின்றது.

சிங்கப்பூரில் பெரும்பான்மையானவர்கள் சீனர்களும் மலேய இனத்தவர்களும் ஆவர். எனினும் மிகச்சிறிய சிறுபான்மையினரான தமிழ்ப் பேசும் மக்கள் தமது கெட்டித்தனத்தால் நாட்டில் செல்வாக்குடையவர்களாக இருந்தார்கள்.

லீ குவான் யூ அவர்கள் நாட்டின் மொழிகளுக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கும் போது ஆங்கிலம், சீனமொழி, மலாயமொழி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கினார்.

சிங்கப்பூர் இன்று உலகில் மிக உன்னதமான ஒரு நிலையில் வைத்துப் போற்றப்படுகின்றது என்றால் அவர்களின் கொடுத்து வாங்கும் பக்குவமே அதற்குக் காரணம்.

புத்தாண்டு காலமானது கொடுத்து வாங்கும் பழக்கத்திற்கு இடமளிக்கும் ஒரு காலம். எமது நாடு நன்நிலை அடைந்து முன்னேற்றம் காணவேண்டுமானால் எமது அரசியல்வாதிகள் தமது அரசியல் பரிமாற்றங்களில் இந்தக் கொடுத்து வாங்கும் பக்குவத்தைப் பிரதிபலிக்க முன்வரவேண்டும்.

சகலருக்கும் இனிவரும் புத்தாண்டு சென்ற ஆண்டுகளிலும் பார்க்க இனிமையானதாக அமையவேண்டும்! புத்தாண்டு பிறக்கும் போது எம்மவரிடையே தெளிந்த மனமும் பொது நல சிந்தையும் உதயமாக வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணசபை